இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைப் பாதுகாக்க என்ன செய்கிறார்கள் ?

மும்பாய் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் வழக்கம் போல இந்திய அரசு தனது பணிகளைச் செவ்வனே செய்யத் தொடங்கியிருக்கிறது. வழக்கம் போலவே அண்டை நாட்டின் மேல் பழி போட்டுவிட்டு, ஆற அமர புலன் விசாரித்து, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குள் மக்கள் இந்த நிகழ்ச்சியை மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சியில். வழக்கம் போல ஊழல், கறுப்புப் பணச் சேமிப்பு, சுவிஸ் பேங்க் அக்கவுண்ட், இத்யாதி, இத்யாதி.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் - இந்த தீவிரவாத தாக்குதல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு மாதத்திற்கு முன்னரே அமெரிக்க உளவு அமைப்பு இது போன்ற கடல் வழியான ஒரு தாக்குதல் மும்பாயில் நடக்கக் கூடும் என்று இந்திய அதிகாரிகளை எச்சரித்திருக்கிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகளே இதுபோன்ற ஒரு செய்தியை ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். மும்பாயின் பிரபல ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு சிறிது நாள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டதால் இறுதியில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எந்த அளவு பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருக்கும் இவர்கள் தங்களைப் பாதுகாப்பதற்காக என்னென்னவோ தகிடுததங்கள் செய்கின்றார்களே ? கட்சி மற்றும் ஆட்சி பாகுபாடின்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களின் வரிப்பணத்தில் ஸ்பெஷல் பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். ஜெயலலிதாவிலிருந்து, அத்வானி, ஜோஷி, என்று பட்டியல் நீள்கிறது. ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. இதற்காகவே ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் செலவாகிறதாம்.

இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்துக்களாக தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் இவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவாகும் தொகையை மக்களின் பாதுகாப்பிற்காக செலவிடவேண்டும் என்று தாமாகவே முன்வர வேண்டும். தங்களுக்கு அரசினால் கொடுக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள வேண்டும். அல்லது கொடுக்கப்படும் பாதுகாப்பிற்கான தொகையை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை