திங்கள், 23 மார்ச், 2009

போப்பாண்டவர் உளறினாரா ?



சென்ற சில தினங்களாக ஆப்பிரிக்க கண்டத்திற்கு திருப்பயணம் செய்த போப்பாண்டவர் அங்கு நிலவி வரும் வறுமையைக் குறித்தும், பல்நாட்டு நிறுவனங்கள் ஆப்பிரிக்க மக்களை சுரண்டுவதைப் பற்றியும், பெண்களின் நிலையைப் பற்றியும் , அவர்களின் அரசுகள் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடாமல் வாளாவிருப்பதைப் பற்றியும், அவர்களுக்கிடையே நடக்கும் உள்நாட்டுச் சண்டைகளைக் குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்தார் . இவற்றையெல்லாம் விட்டு விட்டு, நல்லொழுக்கம் மற்றும் கருத்தடைச் சாதனங்கள் குறித்தான திருச்சபையின் கருத்துக்களை எடுத்துச் சொன்னதற்காக, மேற்கத்திய இடதுசாரிப் பத்திரிக்கைகளும் ஊடகங்களும், போப்பாண்டவர் ஏதோ கொலைக் குற்றம் புரிந்துவிட்டார் என்பது போலச் சித்தரிக்கின்றன. எய்ட்ஸ் (AIDS) நோய்க்கானத் தடுப்பு மருந்தாக கருத்தடைச் சாதனமான காண்டம் இவர்களால் காண்பிக்கப்படு்கிறது. காண்டம் இல்லையேல் உலகில் எல்லோரும் எய்ட்ஸால் மடிவர் என்ற கருத்து இவர்களால் பரப்பப் படுகிறது.

காலரா, அம்மை போன்ற தொற்றுநோய்கள் தும்முவதாலோ, நுண்கிருமிகள் கலந்த காற்றினாலோ தண்ணீரினாலோ பரவுவதைப் போல எய்ட்ஸ் நோய் பரவுவதில்லை. மாறாக இது பெரும்பாலும் ஒருவர் ஒழுக்க நெறிகளுக்கு மாறாக செயல்படும் பொழுதே தொற்றுகிறது. ஹெச்.ஐ.வி. வைரஸ் பரவ முக்கிய காரணங்களாக கூறப்படுபவை - முறையற்ற வக்கிரமான கட்டற்ற பாலுறவு, போதை மருந்தை உடலில் குத்த உபயோகிக்கும் ஊசியைப் பகிர்ந்து கொள்ளல், ஹெச் ஐ வி உடையவருடை இரத்தத்தை நோயாளிகளுக்குச் செலுத்துதல், ஹெச் ஐ வி பாதித்த தாயிடமிருந்து கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு தொற்றுதல் போன்றவையாம். இவற்றில் முதலில் சொல்லப்பட்ட இரண்டுமே எய்ட்ஸுக்கான முக்கியமான காரணங்களாகும். மருத்துவமனை சிகிச்சை முறைகளால் இந்நோய் தொற்றுவது மிகச்சிறிய அளவே. ஆகவே, நல்லொழுக்க நெறிகளையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் இன்னோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். தீய பழக்கவழக்கங்களை களைவதே எய்ட்ஸை தடுப்பதற்கான வழிகளில் முக்கியமானது. ஆனால் காண்டம் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் அடிவருடிகளான சில முற்போக்குவாதிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் சுய லாபத்துக்காக காண்டமே எய்ட்ஸுக்கு எதிரான முக்கிய கருவி என்று பிரச்சாரம் செய்கின்றனர். நல்லொழுக்க நெறிகளில் எப்போதும் நம்பிக்கையில்லா மேற்கத்திய முற்போக்குவாதிகளுக்கு இப்படிச் சொல்வது மிகப்பெரிய குற்றமாகப் படுகிறது. முற்போக்குவாதிகள் ஆப்பிரிக்கர்களுக்கு காண்டத்தைக் கொடுத்து, "எய்ட்ஸை தடுப்பதைப் பற்றிய எல்லாவற்றையும் காண்டம் என்கிற ஆண்டவன் பார்த்துக்கொள்வான்; நீங்கள் எல்லாவிதமான வக்கிரங்களையும் செய்துகொள்ளுங்கள்; காண்டமிருக்கப் பயமேன்" என்கிற உறுதிமொழியைக் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியது கட்டற்ற சமூகம். இவர்களது பயணம் 'எங்கும் செக்ஸ், எதிலும் செக்ஸ், எப்படியும் செக்ஸ், எவருடனும் செக்ஸ்' என்னும் "உயர்ந்த" நோக்கத்தைத் தேடிச் செல்கிறது. அப்பயணத்திற்குத் தடையாக இருப்பவர்களெல்லாம் இவர்களுக்கு குற்றவாளிகள்தான். ஆகவே "காண்டத்தைக் கைவிட்டுவிட்டு நல்லொழுக்கத்தைக் கையில் எடு" என்று சொல்லும் போப்பாண்டவர் இவர்களது பார்வையில் மாபெரும் குற்றவாளிதான்.

எய்ட்ஸைக் குறித்த அறிவு மக்களுக்கு வந்த காலத்திற்கு முன்பே கத்தோலிக்க திருச்சபை கருத்தடைச் சாதனங்களைக் கண்டித்தே வந்திருக்கிறது. ஏனென்றால் மனித உயிர் உருவாவதை செயற்கை முறையில் தடுக்கலாகாது என்பது திருவிவிலியத்திலிருந்து பெறப்படும் போதனை. ஆகவேதான் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பும் கத்தோலிக்கர்களுக்கு இயற்கை முறையைப் பரிந்துரைக்கிறது. ஆயினும் விளிம்பு நிலைமைகளுக்கு சில விதிவிலக்குகளை அனுமதித்தே வந்திருக்கிறது. அண்மையில் பி.பி.சி. நிருபர் ஒருவர் கத்தோலிக்கர் ஒருவரிடம் கேட்டார் - "ஒரு குடும்பத்தில் கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் அவர்கள் தாம்பத்தியத்திற்கு என்ன செய்ய வேண்டும் ?". அதற்கு அவர் சொன்னார் "இதுபோன்ற நிலையில் காண்டம் உபயோகிக்க திருச்சபை அனுமதிக்கிறது".


போப்பாண்டவரின் இந்த போதனையைக் குறித்த கண்டனங்கள் ஏனைய நாடுகளைவிட (பெயரளவு) கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழுவதாக கூறப்படும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே வருகிறது. அங்கிருந்தே "போப்பாண்டவர் உளறுகின்றார்" என்ற குரல் எழுகின்றது. இது மற்றவர்களுக்கு ஆச்சரியமாகப் படலாம். ஆனால் கத்தோலிக்கத்தின் அண்மைய வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் கத்தோலிக்கம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரியும் நிலையில் இருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து கத்தோலிக்க திருச்சபையை குலைக்கும் நோக்கத்தில் முற்போக்குவாதிகளும் அவர்களை உருவாக்கிய கட்டற்ற கொத்தனார்களும் சிறிது சிறிதாக கத்தோலிக்கப் பூசாரிகளாகி தம்மை திருச்சபையுடன் இணைத்துக் கொண்டனர். அறுபதுகளில் கூட்டப்பட்ட ஒரு "சங்கம்" இவர்களது கட்டற்ற சிந்தனைகளையும் செயல்களையும் திருச்சபையில் பரப்ப வசதியாக அமைந்தது. அப்பொழுது இருந்த போப்பின் காலத்திலும் அதற்குப் பின் வந்தவரின் காலத்திலும், இக் கட்டற்ற சிந்தனைகள் கத்தோலிக்க உலகம் எங்கும் பரப்பப் பட்டது. பூசாரிகளைப் பயிற்றுவிக்கும் கல்வியகங்கள் முற்போக்குவாதிகளின் சிந்தனைகளைப் பரப்பும் பாசறைகளாகவும் கடவுளையும் மறுக்கும் கட்டற்ற சிந்தனையாளர்களின் கூடாரங்களாகவும் மாற்றப்பட்டன. இவர்களின் அயராத உழைப்பின் பலன்தான் இக்காலத்தைய பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள். தற்போதைய போப்பாண்டவர் முற்போக்குப் பூசாரிகளின் சிந்தனைகளுக்கு உடன்பட மறுப்பவர். அதனால்தான் முன்பு சபையைவிட்டு நீக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நான்கு பேராயர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வதாக அறிவித்தார். இதுபோன்ற செயல்களால் தங்களின் கட்டில்லா வாழ்க்கைக்கு தடங்கல் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சும் முற்போக்கு பூசாரிகள் கூட்டம், போப்பை எப்படியாவது அடக்கிவைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது. அதனால் தான் போப்பாண்டவர் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்கப் பார்க்கின்றன இப்பூசாரிகளுடன் தொடர்புள்ள இடதுசாரி சார்புடைய ஊடகங்கள். இம்முற்போக்கு பூசாரிகளில் பலரும், போப் எப்பொழுது இறப்பார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் இவர்கள் ஒன்றை மட்டும் உணரத் தவறிவிட்டார்கள். முறையற்ற வக்கிரப் பாலுறவும், கட்டற்றச் சிந்தனைகளும் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு கத்தோலிக்க கிறிஸ்தவம் இதுவரை வந்திருக்கிறது. பண்டைய ஒருசில போப்களும் உண்மைக்கிறிஸ்தவத்திற்கு எதிரிகளாகவும் துர்-மாதிரிகையாளர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஆயினும், கத்தோலிக்கம் அவர்களை புறக்கணித்து கிறிஸ்து காட்டிய வழியில் இன்றுவரை சென்றுகொண்டுதான் இருக்கிறது. இன்னும் செல்லும்.

மத்தேயு நற்செய்தி :16:18

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
மத்தேயு நற்செய்தி :7:25

மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.